பசுமை இந்தியா

கிருத்திகா அவள் மாணவன் ஒருவனுக்கு 'பசுமை இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுத  உதவி செய்ய வேண்டுமாம். நான் பலமுறை அவளிடம் விவசாயத்தை பற்றி மொக்கை போடுவதுண்டு. அதனால் தானோ என்னவோ எனக்கு விவசாயத்தைப் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டாள் போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. எங்கள் குடும்பம் விவசாயத்தை விட்டு இரு தலைமுறைகள் ஆகின்றன. இந்த நிலைமையில் எனக்கு விவசாயம் பற்றிய அனுபவ அறிவுக்கு வாய்ப்பே இல்லை. சிறிய தோட்டத்தில் புற்களை பிடிங்கியுள்ளேன் boys high school pt periodஇல். பின்னர், வீட்டில் செடிகள் வளர்த்திருக்கிறோம். அதற்கு பாத்தி கட்டியிருக்கிறேன். தண்ணீர் விட்டிருக்கிறேன். உரத்திற்கு கல்லுப்பு போட்டிருக்கிறேன். அவ்வளவு தான்.

ஆனால் சில வருடங்களாக பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். எல்லா விஷயங்களும் ஆழமாகப் பதியவில்லை என்றாலும் ஒரு மிகச் சிறிய கட்டுரை எழுதும் அளவு மனதில் சில விஷயங்கள் பதிந்திருக்கின்றன.

அவை கோவையாக (பேச்சுத் தமிழில் 'கோர்வையாக') இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. மனதில் தோன்றுவதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு பின்னர் தொகுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் அல்லது அதை கிருத்திகாவிடமே விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.  அந்த குறிப்பெடுத்தல் தான் இந்தப் பதிவு.

1) சில தகவல்களும் உண்மைகளும்:
What is the future of farming in India என்ற கேள்விக்கு பாலாஜி விஸ்வநாதன் என்பவர் கொடுத்த விவரம். பாலாஜி விஸ்வநாதன் என்பவர் quora என்ற கேள்வி பதில் தளத்தில் சிறப்பான பதில்களை கொடுப்பவர். அவர் கொடுக்கும் பதில்கள் அறிவுபூர்வமாகவும் ஏற்கத்தக்கதாகவும் அமைவன. பலராலும் பெரிதும் படிக்கப்படுவன. அவர் கொடுக்கும் விவரங்களில் சில கீழ் வருமாறு:

(அ) சாதாரண கணக்கு:
இரு விவசாயிகளிடம் மொத்தம் 2 ஹெக்டர் (5 ஏக்கர்) விளை நிலம் இருக்கிறது என்று கருதுவோம். ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டரில் 2300 கிலோ அரிசி விளைவிக்க முடியும். ஒரு கிலோ அரிசியை rs. 20 க்கு விற்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஆக ஒரு வருடத்திற்கு இரண்டு ஹெக்டரில் இருந்து (2300 x 2 x 20) 92000 ருபாய் கிடைக்கும். இதில் ஒரு ஹெக்டருக்கு 15000 ரூபாய் உரம், பம்பு செட், தண்ணீர், விதை மற்றும் இதர செலவுகளுக்கு தேவைப்படுகிறது. ஆக 2 ஹெக்டருக்கு 30000 ருபாய்.

2 ஹெக்டர் (5 ஏக்கர்):
வருட வருமானம் = 92000 ரூபாய்
வருட பராமரிப்பு மற்றும் அத்யாவசிய செலவுகளுக்கு தேவைப்படும் தொகை = 30000 ரூபாய்
வருட லாபம் = 92000 - 30000 = 62000 ரூபாய்
மாத லாபம் = 62000 / 12
                  ~ 5000 ரூபாய் (தோராயமாக)
இந்த லாபத்தை இரண்டு பேர் பகிர வேண்டும்.
ஒருவருக்கு ~ 2500 ரூபாய் கிடைக்கும் (தோராயமாக).

நம் நோக்கம் என்ன? விவசாயிகளின் லாபத்தைக் கூட்ட வேண்டும். bold-italics எண்களைப் பார்க்கவும்

> இரண்டு விவசாயிகளுக்கு பதில் ஒரு விவசாயி இருந்தால்? கணக்குப் போட்டுக்கொள்ளவும். 2500 க்கு பதில் 5000 ரூபாய் வரும்.

> விளைச்சல் பெருகி, 2300 கிலோக்கு பதில் 3000 கிலோ விளைவிக்க முடிந்தால்? அல்லது அதற்கு மேல் முடிந்தால்? எளிமைக்காக 3000 என்றே வைத்து கணக்குப் போட்டுக்கொள்ளவும் 3000 x 2 x 20.

> கிலோ 20 க்கு பதில் 30 இருந்தால்? அல்லது அதற்கும் மேல் இருந்தால்?
    ((4600 x 30) - 30000) / 12 = மாதம் 9000 கிடைக்கும்

ஆக விவசாயிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், அல்லது ஒரு கிலோ விளை பொருளின் விலையை உயர்த்த வேண்டும், அல்லது ஒரு ஹெக்டர் விளைச்சலை பெருக்க வேண்டும், அல்லது மூன்றையும் செய்ய வேண்டும். மூன்றையும் செய்வது சிறப்பு.

(ஆ) மாயத் தோற்றம்:
        அரசியலில் ஆர்வமில்லை ஆனால் எல்லாக் கட்சியினரும் எதிர்க் கட்சியில் இருக்கும்போது 'விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்', 'விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது' என்று உரக்க கத்துகின்றனர். செய்தித்தாள்களிலும் இதை பரப்புகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்துதான் கொள்கின்றனர். அது தடுக்கப்படவேண்டிய ஒன்றே. ஆனால் அதே அளவு மாணவர்களும் தற்கொலை செய்துகொள்கின்றனர், இல்லத்தரசிகளும் அவ்வாறே, கார்பரேட்களில் வேலை செய்பவர்களும் அவ்வாறே, தொழில் முனைவோரும் (entrepreneur களும்) அவ்வாறே. செய்தி நிறுவனங்களுக்கு விவசாயிகள் தற்கொலைகளைத் தவிர மற்ற யாவும் விலைபோகாச் சரக்குகளே. நாமும் விவசாயத்தை பெரிதும் மதிப்பதால் விவசாயிகள் மேல் தான் நமக்கும் அனுதாபங்கள் அதிகம்.
        விவசாயிகளின் எண்ணிக்கை இவ்வளவு கடும் சூழ்நிலைகளிலும் துளியும் குறையவில்லை. விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஒரே விவசாயி பல ஏக்கர் நிலத்தை பராமரிக்கவும் விளைவிக்கவும் கூடிய திறனும் தொழில்நுட்பமும் வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை. விவசாயிகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
        இந்தியாவில் பசுமை புரட்சி வந்தது. அது விவசாயியின் லாபத்தைப் பெருக்கியிருக்க வேண்டும். பெருகியிருக்கும், விவசாயிகளின் எண்ணிக்கை அப்படியே இருந்திருந்தால். விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்ததால் பசுமைப் புரட்சியின் பயனை விவசாயிகளால் அனுபவிக்க முடியவில்லை.
        அரசியலுக்காக, செய்திக்காக 'விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்', 'விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது' என்று பரப்பாமல்,
> விவசாயிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும்.
> ஒரு விவசாயி பெரு நிலத்தை வைத்து விவசாயம் செய்ய வேண்டும்.
> விளைபொருட்களின் விலை உயர வேண்டும்.
> நவீன முறைகளை பயன்படுத்த வேண்டும்.
> சிறு நிலம் வைத்திருப்பதை விட பெரு நிலம் வைத்திருப்பதே விவசாயத்துக்கு உகந்தது.
> கூட்டுறவு விவசாயம் செய்வதே நல்லது. அது தான் பல சிறு நிலங்களை ஒரு பெரு நிலமாகும். பெரு நிலமாக இருந்தால் தான் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். அவ்வாறு செய்தால் தான் விளைச்சல் பெருகும்.
என்ற உண்மைகளை எடுத்துரைத்திருக்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்துக்காகவும், செய்திப் பரபரப்பு (trp) மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காகவும், 'விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்', 'விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது' என்ற மாயத் தோற்றத்தை பரப்புவதிலேயே கருத்தாக செயல்பட்டனர்.

2) உழவர் சந்தைகள்:
உழவர் சந்தைகள் உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை தாமே விற்று நல்ல லாபம் அடைய வழி செய்யும் ஒரு தளம். சிறிது காலம் அப்படித்தான் இருந்தது. இப்பொழுதோ பெரும்பாலும் அரசியல்வாதிகளின் அசச்சுறுத்தல்களால் அரசியல்வாதி கூறும் ஆட்களுக்கு மிகக் குறைந்த விலையில் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மையான விவசாயிகளால் உழவர் சந்தைகள் பக்கமே வரமுடிவதில்லை. குரோம்பேட்டையில் உள்ள உழவர் சந்தையில் விலை மிகவும் அதிகம், ஏறக்குறைய அண்ணாச்சி கடையில் கிடைக்கும் அதே விலைக்குத்தான் உழவர் சந்தையிலும் கிடைக்கிறது என்று அந்தப்பகுதியைச் சார்ந்த என் நண்பர் கூறினார். அதே ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் குறைந்த விலையில் காய்கனிகள் கிடைக்கின்றன. பல உழவர் சந்தைகள் தீய நோக்கம் கொண்டவர்களால் பீடிக்கப்படாமலும், சில பீடிக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த உழவர் சந்தைகளை மீட்க வேண்டும்.

3) பயிர்களை தேர்ந்தெடுப்பது:
சில பயிர்களுக்கு நிறைய தண்ணீர் தேவை, சிலவற்றுக்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லை. பருவ மழை பொய்ப்பதன் காரணத்தினாலும், மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பங்கீட்டு சிக்கல்களாலும் விவசாயத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதில்லை. பாரம்பரிய பயிர்களுக்கு தண்ணீர் தேவை அதிகம். அதனால் சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் குறைவாக வேண்டும் பயிர்களை பயிரிட வேண்டும். வாழையடி வாழையாக பாரம்பரிய பயிர் செய்பவர்களுக்கு இது உணர்வு ரீதியான கலக்கத்தை கொடுக்கும். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப பயிர்களை விளைவிப்பதே நல்ல வாழ்வைத் தரும். பாரம்பரிய பயிர்களைத் தான் விவளைவிக்க வேண்டும் என்ற மனத்தடையை உடைத்து மீண்டு வர வேண்டும்.

4) விவசாயிகளே நன்மதிப்பு கொடுக்கும் கடைசி பொருளையும் தயாரிக்க வேண்டும்:
சட்டென்று எனக்குத் தோன்றுவன:
> மாம்பழம்/மாங்காய் :: ஊறுகாய், பழரசம் (juice), ஜெல்லி
> தக்காளி :: ஊறுகாய், சாஸ் (sauce)
> தேங்காய் :: இளநீர், தேங்காய் எண்ணெய், தேங்காய் பருப்பி மற்றும் இதர இனிப்பு வகைகள்
> எள்ளு :: நல்லெண்ணெய்

மேல் சொன்ன அனைத்திலும், மூலப்பொருட்களின் விலை மிகக் குறைவு (:: க்கு இடப்பக்கம்). அதை வைத்து செய்யப்படும் பொருட்களின் விலை அதிகம் (:: க்கு வலப்பக்கம்). விவசாயிகளே தொழில்நுட்பங்கள் மூலம் கடைசி, நல்ல மதிப்பு தரும் பொருட்களை தயாரித்தால் விவசாயிகளின் வருமானம் பெருகும். அவர்களின் வாழ்வாதாரம் உயரும்.

5) கண்மூடித்தனமான எதிர்ப்பு:
GMO (Genetically Modified Organisms) பயிர்கள் நல்ல விளைச்சலை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பக்க விளைவுகள் அதிகம் இல்லை என்கின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக இதை பலரும் எதிர்க்கின்றனர். எந்த ஒரு தொழில்நுட்பமானாலும் அதில் இருக்கும் நன்மை தீமைகளை நடுநிலையோடு அலசி ஆராய்ந்து தெளிந்து செயல்படுத்த வேண்டும். கண்மூடி எதிர்ப்பு பெரும் மக்கள் தொகை உள்ள நம் நாட்டிற்கு நல்லதல்ல.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?