என் ஊரு சிவபுரம்

        சிவபெருமானை நினைத்தால் எனக்கு உடனே நினைவுக்கு வரும் விஷயங்கள், திருவண்ணாமலை, ரமண மகரிஷி, எழுத்தாளர் பாலகுமாரன், இசைஞானி இளையராஜா, திருவாசகம், ஆத்ம ஞானம் ஆகியன. ஏதாவது ஆரம்பித்து "ததக்கா புதக்கா" (amateur) என்று எழுதித்தான் பார்ப்போமே.

        எப்பொழுது நமக்கு (குறைந்தபட்சம் எனக்கு) இறைவன் தேவைப்படுகிறார்? சில நேரங்களில், "என்னடா பாலாஜி, நம்ம ஒன்னு நெனச்சா வேற ஏதோ எக்குத்தப்பா நடக்குதே ?" என்று தோன்றும். மனதில் அச்சம் தோன்றும், "உனக்கு உண்மைலையே திறம இருக்கா ? இல்ல நீ ஒரு வெத்துவேட்டா ?" என்று. இதைப்போன்ற தாழ்வு மனப்பான்மையும், அவமானங்களும், இயலாமைகளும் தான் நம்மை, "நம்மளோட அறிவுக்கும் சக்திக்கு அப்பால என்னமோ ஒன்னு இருக்குடா!!" என்று சிந்திக்கவும் வைக்கும். 

        அதன் அடுத்த நிலை, தோல்விகளாக நம்மை வந்து தாக்கிக்கொண்டே இருக்கும்பொழுது, "எவ்வளோ நாள் தான் நானும் வருதப்பட்டுட்டே இருக்க முடியும்? சொதப்பறப்ப எல்லாம் வருத்தப்பட முடியுமா? வெற்றி, தோல்வி எது வந்தாலும், ஒரு அஞ்சு நிமிஷம் (மரியாதை நிமித்தமாக) மட்டும் வருத்தப்பட்டுட்டு, மத்தபடி சந்தோஷமா (unperturbed'அ) இருக்க முடியுமா ?" என்ற கேள்வி ஏற்பட்டு, அதிர்ஷ்டம் இருந்தால் முன்பு எங்கிருந்தோ வந்த ஒருவர், "உன்னோட உண்மையான ஸ்வரூபம் உனக்குத் தெரியுமா ?" என்று என்றைக்கோ கேட்டது நினைவுக்கு வரும்.

        இதுவரையில் என் வாழ்கையில் (என் அளவிலேனும்) உணர்ந்த உண்மை: துக்கம் வந்தால் தான் தத்துவம் விளங்கும் (அரைகுறையாகவாவது).

இளையராஜாவின் தத்துவப் பாடல்:
இதற்கு நான் கொடுக்கும் பெயர்: மனித வரலாறு.
ஆல்பம்: குரு ரமண கீதம்
என் ஊரு சிவபுரம், பரலோகப் பெரும்புரம்,
சொந்த ஊர விட்டுப்புட்டு எப்படி இங்கே வந்தேனென்று தெரியலயே ?
உலக வாழ்கை ஒருபுறம், தெரியவில்லை மறுபுறம் [full of surprises and mysteries]
என்னப் பெத்த அப்பன் சிவனிடம் எப்படி திரும்பி போவது என்று தெரியலயே ?

சொந்த ஊரு அங்கிருக்க, பந்தமற்ற வீடிருக்க,
எந்த வேலைக்காக இங்கே வந்தேனோ ?
புரியாத உலகிருக்க, புரிஞ்சு தவிக்கும் மனசிருக்க,
என்ன செஞ்சா நானும் திரும்பிப் போவேனோ போவேனோ ?

சத்திய லோகத்தில் பிறந்ததனால் சாகாவரம் பெற்ற பிறவியிது,
பக்தியெனும் நல்ல உருவெடுத்து பணி செய்து மகிழ்ந்திட்ட பிறவியிது.
உலகத்தில் ஏன் வந்து பிறந்ததுவோ? உண்மையை ஒரு நொடி மறந்ததுவோ ?
நரகத்தின் துயர் விட்டுத் திரும்பிடுமோ? திரும்பிட வழியின்றி தவித்திடுமோ ?

அன்பும் அருளும் கரைபுரண்டோடிடும் சத்தியலோகத்திலே.
ஒரு இன்பமும் துன்பமும் இல்லா நிலையினில் வாழ்ந்திடும் காலத்திலே,
அப்பனைத் தொழுதிடும் மனதினிலே ஆசை விஷச்செடி முளைத்ததுவோ ?
அவன்பணி தடைசெய்து வினை விளைந்து, ஆட்டிட விதி வந்து அழைத்ததுவோ ?

அதனால் இங்கே வந்தேனா? அறிவை இழந்தே தவித்தேனா ?
உண்மை மறந்தே கிடந்தேனா [that our real nature is DIVINITY (as that of God) and that we are souls]? ஊர் திரும்பிட துடியாய்த் துடித்தேனா ?

பெண்ணோடு கலந்து கூடி குலவிட வந்தேனா? இசைப்
பண்ணோடு பாட்டோடு பாடி ஆடிட வந்தேனா ?
சங்கீதத்த வளர்க்கவா? இல்ல சந்தேகத்த தீர்க்கவா ?
ஒன்னும் இல்லா பெருங்காயத்தக் கரைக்கவா ?
இந்த வாழ்க்கை என்னும் வெங்காயத்த உரிக்கவா உரிக்கவா ?
எதுக்கு எதுக்கு இங்கே வந்தேனோ? மனம் தவிச்சு தவிச்சு தினம் துடிச்சேனோ ?
இதைத்தான்,
நந்தவனத்தில் ஒரு ஆண்டி,
அவன் நாலாறு (பத்து) மாதமாய் குயவரை வேண்டி,
கொண்டுவந்தானொரு தோண்டி,
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
என்று ஒரு சித்தர் கூறினாரோ என்னவோ ?

        மனிதனுக்கு வாழ்கையில் பல துன்பங்கள். எல்லோரும் அறிய விரும்பும் புதிர், "விதியென்று ஒன்று இருப்பது உண்மையா? விதியை மதியால் வெல்ல முடியுமா?" பல தடைகளை தாண்டி வெற்றிகளைக் கண்டவர்கள், மதியின் பக்கமும், பல தோல்விகளைக் கண்டவர்கள் விதியின் பக்கமும் இருப்பதைப் பார்க்கலாம். "உண்மையில் விதியும் இல்லை மதியும் இல்லை. நீ தான் பரமாத்மா. நீ ஆத்ம ஸ்வரூபம். ஆத்மா சில நேரங்களில் விளையாடுகிறது (வெல்கிறோம்) சில நேரங்களில் சும்மா உட்கார்ந்து ரசிக்கிறது (ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறோம்). ஆத்மாவிற்கு விளையாடுவதும், சும்மா உட்கார்ந்து ரசிப்பதும் ஒன்று தான். இரண்டுமே அதற்குப் பிரியமான செயல்கள்தான். உன் ஸ்வரூபத்தை (நீ தான் கடவுள் - தத்வமஸி) என்று உணர்ந்தால் வீணாகக் கவலைப்படத் தேவையில்லை," என்று ரமண மகரிஷி கூறுகிறார். [sorry for rough/coarse/pathetic (but I don't mind) re-telling of maharishi's message]
 
        இப்பொழுது, "இது தான் மேட்டரா!!" என்றொரு தெளிவு வருகிறது. இந்தத் தெளிவு தற்காலிகமானதே. நரந்தர தெளிவு ஏற்பட, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றது பக்தி யோகம் தான். இளையராஜாவின் இசையில் வெளிவந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த நான்கு வரிகள்.
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பொருள்:
ஒரு தினையளவு மட்டுமே தேன் உள்ள பூவினில் தேன் உண்ணாதே -- அற்ப சுகங்களுக்கு ஆசைப்படாதே.
நினைக்கும்பொழுதெல்லாம், காணும்பொழுதெல்லாம், பேசும்பொழுதெல்லாம் நம் எலும்புகள் அனைத்தையும் நெகிழவைக்கும் அளவு சுவை உடைய அந்த ஆத்மஞானத்தின் தலைவன் சிவனிடம் சென்று ரீங்காரம் செய் -- சிவப்பரம்பொருளான வற்றாத தேனைக்குறித்தே உன் ஆசைகள் அனைத்தையும் வை.

        "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்," எனக்குப் பிடித்த இன்னொரு திருவாசகம்:
தந்தது, உன் தன்னை; 
கொண்டது, என் தன்னை; 
சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
பொருள்:
என்னைப் பெற்றுக்கொண்டு, உன்னை எனக்கு அளித்தாய். என்னால் உனக்கு எந்த ஒரு பயனும் இல்லை ஆனால் உன்னால் எனக்குப் பேரானந்தம் கிடைத்தது. நம்மில் யார் சாமர்த்தியசாலி?

போதும் முடிச்சுக்குவோம்.


தென்னாடுடைய சிவனே
என்னோடிரும்.                      #பாலகுமாரன்

Comments

Popular posts from this blog

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?