உமாச்சி காப்பாத்து, நெஜமாவே ;)

என் வீட்டிற்கு என் நண்பன் வந்திருந்தான். அப்பொழுது என் தங்கையின் ஒன்றரை வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டு, குட்டிப் பாப்பாவோட,
    தல எங்க இருக்கு ?
    காது எங்க இருக்கு ?
    மூக்கு எங்க இருக்கு ?
    பல்லு எங்க இருக்கு ?
    வளையல் எங்க இருக்கு ?
    தொப்ப எங்க இருக்கு ?
    கொலுசு எங்க இருக்கு ?
    பூன எப்பிடி கத்தும் ?
    நாயி எப்பிடி கத்தும் ?
    மாடு எப்பிடி கத்தும் ?
    பாட்டி எப்பிடி ஏப்பம் விட்டா ?

என்று ஒவ்வொரு கேள்வியாக கேட்க, அவளும் காட்டிக்கொண்டும், சொல்லிக்கொண்டும் வந்தாள். பின்னர்
"உமாச்சி காப்பாத்துன்னு வேண்டிக்கோ"
, என்று கூறினேன். அவளும் பூஜை அறைக்குச் சென்று இருகரம் கூப்பி நமஸ்காரம் செய்தாள். அப்பொழுது என் நண்பன், "நா இதுவரைக்கும் 'உமாச்சி'ன்னு யாரும் சாமிய சொன்னத பாத்ததில்ல, 'உமாச்சி'ன்னா என்ன பாலு?" என்று கேட்டான்.

அது ஒரு நல்ல கேள்வி. அந்த சமயத்தில் உமாச்சி என்றால் சாமிதான் என்று அவனுக்கும் நிச்சயம் புரிந்திருக்கும், அப்படி இருந்தும் அவன் அவ்வாறு கேட்டதால் அவன் 'உமாச்சி'யின் பெயர் காரணத்தை எதிர்பார்க்கிறான் என்று புரிந்துகொண்டேன். அப்பொழுது எனக்கு தெரியாததால், "'உமாச்சி'ன்னா சாமி தான்டா. நாங்க அப்பிடி தான் கூப்புடுவோம்", என்று கூறினேன். ஆனால் எனக்குள் நானே யோசித்துப் பார்த்தபொழுது என் அம்மா முன்னொரு சமயம் என்னிடம் கூறியது ஞாபகம் வந்தது...

சரியான சம்பவம் நினைவுக்கு வராத காரணத்தால் நானே ஒரு கதையை இட்டுக்கட்டிக் கூறுகிறேன்....

 "அம்மா, நா என்ன அவளோ பேக்காட்டமா இருக்கேன், எல்லாரும் என்ன 'அம்மாஞ்சி'ன்னு கூப்படறா?"
"அவா சொன்னா சொல்லீட்டு போறா. அவாள லட்சியம் செய்யாத. யாருக்கும் அம்மாஞ்சியோட அர்த்தமே தெரியாது. ஏதோ 'பைத்தியம்', 'பேக்கு', 'டியூப் லைட்' அப்பிடீன்னு நெனச்சுண்டு சொல்லறா, அவாளுக்குத்தான் ஒன்னும் தெரியாது"

"அம்மாஞ்சின்னா என்னம்மா?"
"அம்மாஞ்சின்னா, 'அம்மானோட சேய்'ன்னு அர்த்தம். 'அம்மான்'ன்னா 'மாமா'ன்னு அர்த்தம், 'சேய்'ன்னா 'குழந்தை'ன்னு அர்த்தம். அம்மாஞ்சின்னா மாமாவோட பையனோ பொண்ணோன்னு அர்த்தம். புரிஞ்சுதோ?"

என்று என் அம்மா விளக்கம் சொன்னாள்.

அதே அடிப்படையில்,
உமாச்சி = உமா + சேய் என்றிருக்கலாமென்பது என் ஊகம். சரியான, நம்பகமான பதில் கிடைத்தால் பகிர்கிறேன்.

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?